தமிழ்நாடு

சென்னையிலிருந்து தமிழகம் முழுக்க பரவிய போராட்டம்: போலீஸ் குவிப்பு

webteam

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது நடந்த தடியடியை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, மதுரை மாவட்டம் உத்தங்குடி பள்ளிவாசல் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இரவு நடந்த போராட்டம் முடிந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கலைந்து சென்ற நிலையில், சுமார் 100 இளைஞர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மதுரை, மஹபூப்பாளையம் ஜின்னா திடலில் விடிய, விடிய தொடரும் தர்ணா போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நேற்றிரவு இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

நாகை மாவட்டம், நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கரூர் பேருந்து நிலையம் அருகே இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், புதுச்சேரி அருகே உள்ள கோட்டகுப்பம் பகுதியில் நேற்று இரவு நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் செய்தனர். இதற்காக 100க்கும் மேற்பட்டோர் மீது கோட்டக்குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 400 நபர்கள் மீது கடையநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டனக் குரல்களை எழுப்பி போராடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுதவிர திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 1200 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இஸ்லாமியர்கள் கடைகள், வணிக நிறுவனங்களை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் நடைபெறும் இடங்களில் எல்லாம் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.