ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன், ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு முதல்-அமைச்சருக்கு மனு அளித்துள்ள நிலையில், நேற்று முதல் அவர் உணவை உண்ணாமல் சிறையில் வடக்கு திசை நோக்கி தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான முருகன், சமீபகாலமாக ஆன்மீகத்தில் ஈடுபட்டு வருகிறார். காவி உடையில், ஜடாமுடியுடன் சாமியார் தோற்றத்தில் காணப்படும் முருகன், விடுதலை செய்யக்கோரி பல போராட்டங்கள் செய்தும், பலனில்லாததால் கடும் அதிருப்தியில் அவர் ஆன்மீகத்தின் பக்கம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் சிறையிலேயே ஜீவசமாதி அடையப்போவதாக சில வாரங்களுக்கு முன்பு சிறைத்துறைக்கு மனு அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அந்த மனுவில், ஆகஸ்டு 18-ந் தேதி முதல் உணவு உண்ணாமல் கடவுளையே நினைத்து ஜீவசமாதி அடையப்போவதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவர் தினமும் ஒருவேளை உணவு உண்டும், பிற நேரங்களில் பழங்களை சாப்பிட்டு வருவதாகவும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் தன்னுடைய ஜீவசமாதிக்கு அனுமதியளிக்கும்படி முதலமைச்சர் பழனிசாமிக்கும் சிறைத்துறை நிர்வாகம் மூலமாக முருகன் மனு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முதல் எந்த உணவையும் உண்ணாமல் முருகன் வடக்கு நோக்கி அமர்ந்தபடி ஜீவசமாதி அடையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெயிலர் சண்முகசுந்தரம் முருகன் உணவு உண்ணாமல் இருந்தால் அது சிறை விதிகளின்படி குற்றம். அவ்வாறு அவர், ஈடுபட்டால் அவருக்கு ஜெயில் சலுகைகள் ரத்து செய்யப்படும் என்றார்.