மதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.6.2025) நடந்த முருக பக்தர்கள் மாநாட்டை இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து நடத்தியது. அதில், அதிமுக பிரமுகர்களும், முன்னாள் அமைச்சர்களும் கலந்துக் கொண்டனர். அந்த மாநாட்டில் அண்ணா, பெரியார் குறித்த சர்ச்சைக்குரிய காணொளி ஒளிபரப்பானது. ஆனால், அதற்கு அதிமுகவினர் எந்த ரியாக்ஷனும் செய்யாமல் அமர்ந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அங்கு ஒளிபரப்பப்பட்ட வீடியோவின் கருத்தில் தங்களுக்கு எந்த உடன்பாடும் இல்லை என்றும், கூட்டணி உறவின் அடிப்படையிலேயே கலந்து கொள்ள சென்றதாகவும் அதிமுக பிரமுகர்கள் பேசி வருகின்றனர்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், 2023 இல் அதிமுக - பாஜக இடையே கூட்டணி முறிந்ததை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
அதில், ”அண்ணா, ஜெயலலிதாவை அவதூறாக பேசியதற்காக பழனிசாமி எடுத்த முடிவு தமிழ்நாட்டுக்கே தெரியும். முருக பக்தர்கள் என்ற அடிப்படையிலேயே பங்கேற்றோம். அரசியல் இருக்காது என நம்பினோம்.
அதிமுக கொள்கையில் உறுதியாக உள்ளது. சமரசம் செய்துகொள்ள மாட்டோம். நாங்கள் பின்னால் அமர்ந்திருந்ததால் வீடியோவை பார்க்க வாய்ப்பில்லை. அந்த முருகர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆகவே, ஒலிப்பரப்பான அந்த வீடியோவுக்கு எங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். “ என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், பாஜகவின் கூட்டணி மீண்டும் உடைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.