தமிழ்நாடு

சென்னை: வீட்டில் தனியாக இருந்த தம்பதியினர் கொலை; தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு

kaleelrahman

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகேயுள்ள கொளப்பாக்கத்தில் இரட்டைக் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்துள்ள கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சாம்சன் தினகரன் (63). இவர், சென்னையில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தில் நேரக் காப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி ஆலிஸ் (55), மகன் இம்மானுவேல் (28), மகள் பெனிட்டா (30) ஆகியோர் கூடுவாஞ்சேரியில் தனியாக வசிக்கின்றனர். சாம்சன் தினகரன் தனது இரண்டாவது மனைவி ஜெனட் (52) என்பவருடன் கொளப்பக்கத்தில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில், தந்தை சாம்சன் தினகரனுடன் பேசுவதற்காக மகள் பெனிட்டா போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவரது தந்தை போனை எடுக்கவில்லை. இதனையடுத்து நேற்று காலை மீண்டும் போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். வெகு நேரமாகியும் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த பெனிட்டா, பக்கத்து வீட்டுக்காரரை போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.

அப்போது, பின்பக்க கேட் மற்றும் கதவு திறக்கப்பட்ட நிலையில், கார் மட்டும் உள்ளது. ஆனால் வீட்டில் யாரும் இல்லை என்று கூறியுள்ளனர். இதில், பயந்துபோன அவரது மகள், மகன் மற்றும் முதல் மனைவி ஆகியோர் விரைந்துவந்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து ஓட்டேரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் ஓட்டேரி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்துவந்து வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் சோதனை செய்தனர். இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி விஜயகுமார், வண்டலூர் டிஎஸ்பி அனுமந்தன் ஆகியோர் அங்கு வந்து சாம்சன் தினகரனின் உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்தனர்.

இதனையடுத்து மற்றொரு வீட்டில் உள்ள அறையின் பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். இதில், ரத்தம் சிதறியதை தண்ணீர் ஊற்றி கழுவி இருந்ததை பார்த்தனர். இதைத்தொடர்ந்து சந்தேகம் அடைந்த போலீசார், அங்கிருந்த வீட்டின் தரைத்தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தனர். இதில் ஜெனிட்டா கை கட்டப்பட்ட நிலையிலும், சாம்சன் தினகரன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் சடலமாக கிடந்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த மறைமலைநகர் தீயணைப்புத் துறையினர் கொலையான இருவரது சடலத்தையும் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.