தமிழ்நாடு

தலைதுண்டித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் முதல்வருடன் சந்திப்பு

rajakannan

ஆத்தூர் அருகே 13 வயது சிறுமி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பெற்றோர் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்துள்ளனர். 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 13 வயது சிறுமி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 8 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி, தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டலை வெளிப்படுத்திய காரணத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமியை கொலை செய்த அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் போலீசில் சரணடைந்தார். சிறுமி தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்த கொடூரமான கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வந்தனர். 

இந்நிலையில், சிறுமியின் பெற்றோர், சகோதரர், சகோதரி உள்ளிட்டோர் முதலமைச்சர் பழனிசாமியை அவரது முகாம் அலுவலகத்தில் நேற்று சந்தித்தனர். அப்போது, பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை அவர்கள் முதலமைச்சரிடம் அளித்தனர். இந்த சந்திப்பின் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். 

முதலமைச்சரிடம் அளிக்கப்பட்ட மனுவில், “தற்போது குடியிருக்கும் இடம் பாதுகாப்பானது இல்லை என்பதால், மக்கள் அதிகம் வசிக்கும் பாதுகாப்பான இடத்தில், சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் வீடு கட்டி தர வேண்டும், நர்ஸிங் படித்துள்ள சிறுமியின் மூத்த சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ25 லட்சம் நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”  ஆகிய கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.