முரசொலி நாளிதழை வைத்திருந்தால் திராவிட இயக்கத் தமிழன், மனிதன் எனப் பொருள் என்று முரசொலி நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில், துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். வெங்கையா நாயுடு வெளியிட்ட சிறப்பு மலரை ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். பின்னர், பேசிய ரஜினி, “முரசொலி வைத்திருந்தால் திமுககாரர் என்பார்கள்; துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள். சோ ராமசாமியையும், துக்ளக் பத்திரிகையையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்கள் இருவர்; ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. சோவை போலவே துக்ளக் இதழை கொண்டு செல்கிறார் குருமூர்த்தி” என்றார்.
இந்நிலையில், முரசொலி நாளிதழை வைத்திருந்தால் திராவிட இயக்கத் தமிழன், மனிதன் எனப் பொருள் என்று முரசொலி நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “முரசொலி வைத்திருந்தால் சாதி, மதம் பேதம் பார்க்காதவன், ஆண்டான் - அடிமைக்கு எதிரானவன், ‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்பவன். ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்’ என்பவன். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்பவன். எந்த ஆதிக்கத்தையும் ஏற்காதவன் என்று பொருள். ஆணும் பெண்ணும் சமம் என்பவன் என்றும் பொருள்” என ரஜினியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும்படியாக தனது தலையங்கத்தில் முரசொலி குறிப்பிட்டுள்ளது.