தமிழ்நாடு

”கேரளாவிலும் கரண்ட் பில் அதிகமாகியிருக்குதானே” - சிபிஎம் அறிக்கைக்கு முரசொலி விமர்சனம்!

JananiGovindhan

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழகத்தில் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அறிக்கை விடுத்துள்ள நிலையில் இன்று முரசொலையில் வெளிவந்துள்ள கட்டுரையில் ”மக்கள் தலையில் இந்த மின் கட்டண உயர்வை ஏற்றிட வேண்டும் என்று கழக அரசும் விரும்பவில்லை தவிர்க்க இயலாத நிலையில் மனதில் நிறைய சங்கடங்களை சுமந்து கனத்த இதயத்தோடுதான் இது போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டி உள்ளது இதனை கே. பாலகிருஷ்ணன் நன்கு உணர்வார்.

ஏனென்றால் மார்க்சிஸ்ட் ஆளும் கேரளத்தில் கூட மின் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. தோழர் பாலகிருஷ்ணனுக்கு அது தெரியாது இருக்க முடியாது. தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் இன்று குரல் எழுப்புவது போல கேரளத்தில் மின் கட்டண உயர்வுக்கு கேரளத்து எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர் கடும் விமர்சனங்களை கட்டவிழ்த்து விட்டனர். அதனையும் கே. பாலகிருஷ்ணன் அறிந்திருப்பார்.

எந்த மக்கள் நல அரசும் அது திமுக அரசாக இருந்தாலும் மார்க்சிஸ்ட் தலைமையிலான அரசாக இருந்தாலும் சில சூழ்நிலை காரணமாக இது போன்ற கட்டண உயர்வுகளை அறிவிக்க வேண்டிய நிலை உருவாகி விடுகிறது. இப்படி இக்கட்டான சூழல் உருவாகும் போது இந்த கட்டண உயர்வுகளால் ஏழை எளிய மக்கள் பாதித்துவிடக் கூடாது என்பதில் தனிக் கவனம் செலுத்திட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க இடம் இல்லை.

திமுகவிற்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்குமிடையே சிண்டு முடிந்து, இந்த வலிமை மிகு கூட்டணியை முறித்துவிட சந்தர்ப்பம் கிடைக்காதா என காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் என்பதை தோழர் பாலகிருஷ்ணன் அறியாதவர் அல்ல. வெறும் வாயை மென்று சுவைத்து ஜீரணித்து சுகம் காணும் அந்த வஞ்சகக் கூட்டத்தின் வாய்க்கு அவல் கிடைத்தால் என்னவாகும்? ஆகையால் நாம் விடும் அறிக்கைகள் எதிரிகள் வாய்க்கு அவலாகி விடாது எச்சரிக்கையாகச் செயல்படுவோம்” என முரசொலியில் கட்டுரை வெளிவந்துள்ளது.