Mullaiperiyar Dam Puthiya Thalaimurai
தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் உயரும் நீர்வரத்து.. எதிர்பார்ப்பில் விவசாயிகள்!

முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து உயர்ந்துள்ளது. இந்நிலையில், மழையை எதிர்நோக்கி தமிழக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

PT WEB

செய்தியாளர்: ஐடா அருட்செல்வி & ரமேஷ் கண்ணன்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

முன்னதாக, விநாடிக்கு 89 கனஅடியாக இருந்த அணையின் நீர்வரத்து, தற்போது 506 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116.65 அடியாக உள்ளது. தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்தே அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கிறது அல்லது குறைகிறது.

Mullaiperiyar Dam

இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தொடர்ந்து மழை பெய்தால் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அணையின் நீர்வரத்து தற்போது அதிகரித்து வருவது தமிழக விவசாயிகளிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து நீர்வரத்து மேலும் அதிகரித்தால், பாசன தேவைக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.