தமிழ்நாடு

“கருத்துக்கேட்பு கூட்டம் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை” - முகிலன்

webteam

கருத்துக்கேட்பு கூட்டம் என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை எனவும் அதைக்கூட அரசு பறிக்க நினைப்பதாகவும் சமூக செயற்பாட்டாளர் முகிலன் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜரான சமூக செயற்பாட்டாளர் முகிலன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நடத்தப்படும் கருத்து கேட்பு, சுற்றுச்சுழல் அனுமதி குறித்த கூட்டங்கள், வெறும் பம்மாத்து என்பது தெரியும். சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல்தான் ஸ்டெர்லைட் ஆலை 6 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கியது.

ஹைட்ரோ கார்பன் ஆய்வு செய்ய ஒஎன்ஜிசி ஆலைக்கு 5 ஆண்டுகள், வேதாந்தா ஆலைக்கு 15 ஆண்டு கால அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழகம் விரைவில் பாலைவனமாக்கப்படும். தமிழகத்தில் கனிம வளங்கள் பூமிக்குள் புதைந்துள்ளன. இதனை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே மத்திய அரசு இது போன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

கருத்துக்கேட்பு கூட்டம் என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை. அதைக்கூட அரசு பறிக்க நினைக்கிறது. பெரு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்றே ஹைட்ரோ கார்பன் மீத்தேன் போன்ற திட்டங்கள் குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தை அரசு தடை செய்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக மக்கள் ஜல்லிக்கட்டை போல மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்பார்கள்” என பேசினார்.