பாலியல் வன்கொடுமை வழக்கில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகிலன் மீது புகார் கொடுத்தார். அவர் தன்னை வலுக்கட்டாயப்படுத்தி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் அந்த பெண் புகார் கொடுத்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக முகிலன் மீது ஏமாற்றுதல், பாலியல் பலாத்காரம், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் பிப்ரவரி மாதமே முகிலன் எழும்பூர் நிலையத்தில் இருந்து காணாமல் போனார். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து கரூர் பெண் கொடுத்த பாலியல் பலாத்கார புகார் தொடர்பான வழக்கும் சிபிசிஐடிக்கு கடந்த மார்ச் மாதமே மாற்றப்பட்டது. இது தொடர்பாக கரூரில் உள்ள சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது முகிலன் கண்டுபிடிக்கப்பட்டு எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பாலியல் வன்கொடுமை வழக்கில் முகிலனை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆட்கொணர்வு மனு தொடர்பாக முதற்கட்டமாக எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாகவும் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்டு வாங்கி நாளை காலை கரூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.