தமிழ்நாடு

முதுமலை: கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட பெண் புலி உயிரிழப்பு

webteam

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த 13 வயது பெண் புலி உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் உள்ள, கள்ளஞ்சேரி கிராம விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை இரு தினங்களுக்கு முன்பு புலி வேட்டையாடியது. இதனை அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த ஊர் மக்கள் நேரடியாக பார்த்துள்ளனர்.

இதையடுத்து ஆடு உயிரிழந்த பகுதியில் வனத்துறையினர் கேமராக்களை பொருத்தி அது புலி தான் என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க அப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டிருந்த வனத்துறையினர், புதர் பகுதியில் புலி படுத்திருந்ததை பார்த்துள்ளனர். நீண்ட நேரமாக அசைவு இல்லாத காரணத்தால் அருகில் சென்று பார்த்தபோத புலி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள் புலியின் உடலை கைபற்றி விசாரணை மேற்கொண்டனர். பின்னர் புலியின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதில் இறந்த புலிக்கு 13 வயது இருக்கும் எனவும், கல்லீரல் பாதிப்படைந்து சிரமப்பட்டு வந்ததும் தெரிவந்தது. அத்தோடு வயது முதிர்வு காரணமாக வேட்டையாட முடியாமல், கால்நடைகளை வேட்டையாடியதும் தெரியவந்துள்ளது. உடற்கூறாய்விற்குப் பிறகு அதே பகுதியில் உடல் எரியூட்டபட்டது.