தமிழ்நாடு

வெள்ளநீரில் மிதக்கும் முடிச்சூர்.. வடியாத தண்ணீர்.. என்னதான் பிரச்னை?

webteam

இரு தினங்களாகியும் முடிச்சூரில் வெள்ள நீர் வடியாமல் உள்ளதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் நிச்சயம் கவனத்திற்கு வந்துவிடும். சாதாரண மழைக்கே தண்ணீர் தேங்கும் முடிச்சூர் பகுதியில் நிவர் புயல் காரணமாக பெய்த கனமழை பெரிய இன்னலை உண்டாக்கியுள்ளது. தற்போது முடிச்சூர் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தாழ்வான பகுதி என்பதால் குடியிருப்பு பகுதிகளை சுற்றி நீர் தேங்கியுள்ளது. சுமார் 10 ஆயிரம் குடியிருப்புகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.

இதனால் அடிப்படை தேவைகளுக்குக் கூட பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். குறிப்பாக முடிச்சூரின் அமுதம் நகர், ராயப்பன் நகர், வரதராஜபுரம், மகாலட்சுமி புரம் ஆகிய இடங்கள் தற்போது வெள்ள நீரில் மிதக்கின்றன. விடிய விடிய பெய்த கனமழை ஒருபுறம் என்றால், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பே பிரதான காரணமாக இருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டால் ஆற்றங்கரையோர பள்ளமான பகுதியான முடிச்சூரில் தண்ணீர் பெருமளவில் தேங்கிவிடுவது வழக்கமாக உள்ளது. தற்போது தண்ணீர் தேங்கி இரண்டு நாட்கள் ஆன நிலையில் இன்னும் தண்ணீர் தேங்கியவண்ணமே உள்ளது. அரசு ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். ஆனால் தரைத்தளம் வரை பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நீரை அப்புறப்படுத்தும் பணி தாமதமாகிறது.

அதுமட்டுமின்றி முடிச்சூரின் அருகில் உள்ள நீர்நிலைகளிலும் தண்ணீர் நிரம்பி வழிவதால் முடிச்சூர் நீரை அப்புறப்படுத்த வழி இல்லாமல் நீரை அகற்றும் பணி தாமதமாகிறது. இதற்கிடையே வெள்ள நீர் சூழப்பட்ட தரைத்தளங்களில் மட்டுமே 6ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு குழந்தைகள், முதியவர்கள் பலர் இருப்பதால் அவசர தேவைக்காக மீட்புப்படையினரும் அங்கு தயார் நிலையிலேயே உள்ளனர். மேலும், தண்ணீர் தேங்கியுள்ளதால் தொற்று நோய் ஏதும் ஏற்படாத வகையில் சிறப்பு மருத்துவக்குழுவும் வீடுகள்தோறும் செல்கின்றனர்.

இது குறித்து தெரிவித்த முடிச்சூர் குடியிருப்புவாசி ஒருவர், வருடம் தோறும் செம்பரம்பாக்கம் திறக்கப்பட்டால் எங்கள் பகுதி வெள்ளக்காடாக மாறி விடுகிறது. செம்பரம்பக்கம் நீர் தேங்காமல் சென்றால் எங்கள் பகுதிக்குள் நீர்வராது. அந்தப்பாதையில் நீர் தேங்குவதால் எங்கள் பகுதிக்குள் நீர் இறங்கிவிடுகிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உணவு, குடிநீர் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. அதனையும் அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.