எம்.எஸ். சுவாமிநாதன் pt web
தமிழ்நாடு

எம்.எஸ். சுவாமிநாதனின் நூற்றாண்டு.. கோடிக்கணக்கான இந்தியர்களைப் பட்டினிக் கொடுமையிலிருந்து மீட்டவர்!

இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன். கோடிக்கணக்கான இந்தியர்களைப் பட்டினிக் கொடுமையிலிருந்து மீட்டவர் எம்.எஸ். சுவாமிநாதன்.

PT WEB

இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன், கோடிக்கணக்கான மக்களை பட்டினியிலிருந்து மீட்டவர். 1925ல் பிறந்த அவர், 1943 பஞ்சத்தால் வேளாண்துறையில் ஈடுபட்டார். லால் பகதூர் சாஸ்திரி தலைமையில் பசுமைப் புரட்சி தொடங்கப்பட்டது. 2024-2025ல் இந்தியா 14 கோடி டன் அரிசி உற்பத்தி செய்தது. 2023ல் காலமான சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது.

இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன். கோடிக்கணக்கான இந்தியர்களைப் பட்டினிக் கொடுமையிலிருந்து மீட்டவர் எம்.எஸ். சுவாமிநாதன். இந்த ஆண்டு அவருடைய நூற்றாண்டாகக் கொண்டாடப்படுகிறது. எம்.எஸ். சுவாமிநாதன் குறித்த ஒரு தொகுப்பைப் பார்க்கலாம்.

எம்.எஸ். சுவாமிநாதன்

மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் என்ற எம்.எஸ். சுவாமிநாதன் ஆகஸ்ட் 7, 1925இல் கும்பகோணத்தில் பிறந்தார். சிறுவயது முதலே மருத்துவர் கனவில் இருந்தார் எம்.எஸ். சுவாமிநாதன். 1943இல் வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தது எம். எஸ். சுவாமிநாதன் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. வேளாண்துறையில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பினார். கூடவே, மகாத்மா காந்தியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவரைப் பின்தொடரவும் ஆரம்பித்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகான ஒரு தசாப்தத்துக்கும் மேல் விவசாயத்தில் தன்னிறைவு இல்லாத நிலைதான் காணப்பட்டது. அரிசியை வெளிநாடுகளிடமிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. கோடிக்கணக்கான மக்கள் பட்டினியிலும் வறுமையிலும் வாடினார்கள்.

லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் பசுமைப் புரட்சி தொடங்கப்பட்டது. அதுவரை பாரம்பரிய முறைகளில் செய்யப்பட்ட இந்திய விவசாயம் அதன் பிறகு நவீன முறைக்கு மாறியது. டிராக்டர்கள், தெளிப்பான்கள் உள்ளிட்ட சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன. உயர் விளைச்சல் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள், உரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் அதிக விளைச்சல் கண்டதுடன் இந்தியா விரைவில் தன்னிறைவு பெற்றது.

2024 - 2025ஆவது ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த அரிசி உற்பத்தி 14 கோடி டன்கள் என்ற சாதனை அளவை எட்டியது என்றால் அதற்கான விதை பசுமைப் புரட்சியின்போது போடப்பட்டது ஆகும். இதற்கான பெருமை எம்.எஸ். சுவாமிநாதனையும் சாரும்.

கோடிக்கணக்கான இந்தியர்களைப் பட்டினியில் இருந்து மீட்டதால்தான் டைம்ஸ் பத்திரிகை தேர்ந்தெடுத்த நூற்றாண்டின் நூறு பேர் பட்டியலில் எம். எஸ். சுவாமிநாதனும் இடம்பெற்றார். இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த மற்ற இரண்டு இந்தியர்கள் மகாத்மா காந்தியும் ரவீந்திரநாத் தாகூரும் ஆவார்கள். செப்டம்பர் 28, 2023இல் எம்.எஸ். சுவாமிநாதன் தனது 98ஆவது வயதில் காலமானார். அவரது மரணத்துக்குப் பின், கடந்த ஆண்டு அவருக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கியது.