தமிழ்நாடு

சி.பி.சி.ஐ.டி துறைக்கு டி.ஜி.பி.ஆக ஜாபர் சேட் பதவி உயர்வு

webteam

தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல்துறை அகடாமியின் திட்ட அதிகாரியாக இருந்த ஜாஃபர் சேட், சி.பி.சி.ஐ.டியின் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர் சேட், 2ஜி வழக்கில் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக அவர் மீது வழக்கு இருந்தது. 

இதனையடுத்து 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் முகாமில் அதிகாரியாக இவர் இடம்மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டு மனைகளை வழங்கியதில் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி, ஜாபர் சேட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பல்வேறு வழக்குகள், விசாரணைகள் தொடர்பாக நீதிமன்ற வழக்குக்குப் பின் கடந்த 2016 ஆண்டு ஏப்ரலில் மண்டபம் அகதிகள் முகாமுக்கு கூடுதல் டிஜிபியாக இவர் நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் தற்போது இவர் சி.பி.சி.ஐ.டியின் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். மேலும் சி.பி.சி.ஐ.டியின் டி.ஜி.பி.யாக இருந்த அமரேஜ் பூஜாரி தமிழக காவல்துறை அகடாமியின் அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து  குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்பியாக வருண்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக அருணாச்சலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறை நிர்வாக டிஐஜி கே.எலியர்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை விசாரிக்கும் பிரிவு எஸ்.பிக்களாக சோனல் சந்திரா மற்றும் பழனிகுமார் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.