சு.வெங்கடேசன் முகநூல்
தமிழ்நாடு

சரஸ்வதி நாகரிகம் vs கீழடி|ஒரு கார்பன் மாதிரி கூட இல்லாத சரஸ்வதி நதி - சு.வெங்கடேசன்

ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல் சரஸ்வதி நதியையே கண்டறிந்து பாஜக அரசு உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதாக’ மதுரை எம்பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

கீழடி அகழாய்வு குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையை ஆதாரங்கள் போதவில்லை என்று மத்திய அரசு திருப்பி அனுப்பிய நிலையில், ‘ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல் சரஸ்வதி நதியையே கண்டறிந்து பாஜக அரசு உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதாக’ மதுரை எம்பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அவர் தாக்கல் செய்த நிலையில், இதில் சில விளக்கங்களைக் கோரி அந்த ஆய்வறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது.

அதனை ஏற்க கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும், ஒரேயொரு கண்டுபிடிப்பு மட்டும் எல்லாவற்றையும் மாற்றிவிடாது என்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறி இருந்தார். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பல அரசியல் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கீழடியில் நடத்தப்பட்ட பலகட்ட ஆய்வுகளின்படி, பாசிமணிகள், சில்லுவட்டு, பானை ஓடுகள், இரும்பு, மணலால் ஆன கூம்பு வடிவ பாத்திரம், மண் மூடிகள் என்று 500க்கும் மேற்பட்ட பல்வேறுவகையான பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தன.

சமீபத்தில் கூட ஆண்களின் மண்டை ஓடுகளை வைத்து, அவர்களின் முக அமைப்புகளை அறிவியல் ரீதியாக ஆய்வாளர்கள் மறுஉருவாக்கம் செய்துள்ளனர். கணினி உதவியுடன் கூடிய 3டி முறையில், பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் இந்தப் பணிகளைச் செய்தது. 3டி மாடலில் கீழடி மனிதர்கள் அதுமட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் முகங்கள் மறுஉருவாக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

ஆனால், இது எதையும் போதிய ஆதாரமாக கருதமுடியாது என்றும் ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறிவருகிறது. மேலும், இந்த ஆகழ்வாராய்ச்சியை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, 3 ஆம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும் படியான கண்டுபிடிப்புகள் இல்லை என தெரிவித்த ஸ்ரீராம் என்பவரையே மீண்டும் கீழடி தொல்லியல் ஆய்வு பொறுப்பாளராக நியமித்துள்ளது.

இந்நிலையில், கீழடியில் பல கார்பன் மாதிரைகளை கொடுத்தும், போதிய ஆதாரம் இல்லை என்று கூறிய மத்திய அரசு, ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல் சரஸ்வதி நதியையே கண்டறிந்து பாஜக அரசு உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதாக’ மதுரை எம்பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள அவர்," ராஜஸ்தானில் உள்ள பஹஜ் என்ற இடத்தில் ஐந்து மாதங்கள் மட்டுமே அகழாய்வு நடந்துள்ளது. பத்து குழிகள் மட்டுமே தோண்டியுள்ளனர். அதற்குள்

சரஸ்வதி நதியை கண்டுபிடித்து விட்டனர்.

இதே முறையில் ஹரியானாவிலும் இமாச்சல பிரதேசத்திலும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளார்கள்.

கீழடியில் 102 குழிதோண்டி, 88 கார்பன் மாதிரிகளையும், 5700 தொல் பொருட்களையும் கொண்டு அறிவியல் முறை பகுப்பாய்வு நடத்தி அறிக்கை சமர்பித்தால், ஆதாரம் போதவில்லை என்கிறார்கள்.

ஆனால், ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல்,

நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு." என்று பதிவிட்டுள்ளார்.