புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வரின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசுகையில், “வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காவிகளோடு திமுக கூட்டணி வைத்துள்ளது. அப்போது கலைஞர் காவிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார்.
ஆனால், தற்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கு முன் பல ஆபத்துக்கள் உள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது. உதாரணமாக ஆட்சி பொறுப்பேற்ற போது, கொரோனா உச்சகட்டத்தில் இருந்ததால் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருந்தது. அதனை போக்கினார். அதனைத் தொடர்ந்து வெள்ளம் வந்தது. பத்து தினங்களுக்குள் சென்னையை மீட்டெடுத்தார்! அதேபோல தேர்தலில் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் வாக்குறுதிகளை நிறைவேற்றி விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், கடந்த ஆட்சியாளர்கள் கஜானாவை காலி செய்து விட்டனர் என்பது தெரியவந்தது. தற்போது அதனை சீர் செய்து கொடுத்த வாக்குறுதியான 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்கு முதல்வர் ஆணையிட்டுள்ளார். தொடர்ந்து எதிரிகளோடு தான் ஸ்டாலின் களமாடிக் கொண்டிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 80 கோடி ரூபாய் மதிப்பில் பேனா தேவையா என்று எடப்பாடி கேட்கிறார், அவருக்கு என்ன தகுதி உள்ளது இப்படி கேட்பதற்கு? குற்றவாளியான ஜெயலலிதாவிற்கு அவர்கள் நினைவுச் சின்னம் கட்டினர். அதை யாராவது எதிர்த்து கேட்டார்களா? ஜெயலலிதா சொத்து வழக்கில் சசிகலாவை பலிகடா ஆக்கிவிட்டார்கள்.
பாராளுமன்றத்தில் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களும் பாஜக எம்பிக்களும் உண்மையை பேச மறுக்கின்றனர். பொய்யாகத்தான் பேசுகின்றனர்.
என்னுடைய அரசியல் வரலாற்றில், பாராளுமன்றத்தில் இல்லாத ஒரே பிரதமர் மோடி மட்டும்தான். பாராளுமன்ற ஜனநாயகத்தை பிரதமர் மோடி அவமதிக்கிறார்.ஆ.ராசா
என் மீது 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றம் சுமத்தினார்கள். அதற்காக பாராளுமன்றத்தையும் பாஜக முடக்கியது. அந்த குற்றச்சாட்டின் மீது நீதிமன்றத்தில் நானே நேரடியாக வாதாடி நான் குற்றமற்றவன் என்பதை நிரூபித்தேன்.
அதே போன்று அதானி விவகாரத்தில் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த குற்றச்சாட்டிற்கு மோடி பதில் கூறாததின் மர்மம் என்ன?
அதானி விவகாரத்தில் மம்தா பானர்ஜி, ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ் ஆகியோர் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றின் ரெய்டுகளுக்கு பயந்து இதுவரை அவர்கள் வாய் திறக்கவில்லை. அதானி விவகாரத்தில் வாய் திறந்த ஒரே கட்சி திமுக தான்.
அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான். இதை கூறியதற்காக என் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுத்து என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை நான் சிறைக்குச் செல்ல தயாராக உள்ளேன்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ் மொழியையும் மக்களையும் தமிழினத்தையும் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பாற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்” என்று பேசினார்.