குழந்தை வளர்ப்பு என்பது பல பெண்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு மிகப்பெரும் சவாலாக நிற்கிறது. பலர் தங்கள் கனவு வேலையை உதறிவிடக்கூட நேரிடுகிறது. இந்நேரத்தில் சென்னையில், உபர் உணவு டெலிவரி செய்து கொண்டே குழந்தையை பார்த்துக் கொள்ளும் தாய் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.
முதுகில் உணவுப்பொருட்கள் அடங்கிய பெரிய பை. முன்னே தன்னுடன் சேர்த்துக் கட்டப்பட்ட குழந்தை என இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்கிறார் வள்ளி. குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாகவும், ஒன்றரை வயதாகும் குழந்தையை வீட்டில் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததாலும், குழந்தையை சுமந்து கொண்டே சென்னை நகரை வலம் வருகிறார் வள்ளி.
உணவு டெலிவரி செய்யும் நேரத்தில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதும் ஒரு சவாலாக இருந்தாலும் ஏற்கெனவே இருசக்கர வாகனம் ஒட்ட தெரிந்ததால் அதை சமாளித்து விடுகிறார். ஒரு நாளைக்கு குறைந்தது 10 ஆர்டர் கிடைத்தால் மட்டுமே ஓரளவு உழைப்புக்கு ஏற்ற வருமானம் ஈட்ட முடியும் என கூறுகிறார்.
இதையும் படிக்கலாமே : ''பெண் வெறுப்பை பிரதிபலிக்கவும், கொண்டாடவும் வித்தியாசம் உண்டு'' - அர்ஜூன் ரெட்டியை வறுத்தெடுத்த பார்வதி!
குழந்தையுடன் ஒரு நாளைக்கு 50 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய நேரிட்டாலும், வள்ளி, தன்னம்பிக்கையுடன் தனது பயணத்தை தொடர்கிறார். வாழ்க்கைப் பயணத்தை மலர வைக்கும் இந்த ஒன்றரை வயது மகனை தனது பலமாக நினைக்கும் இப்பெண் வள்ளி தனது தன்னம்பிக்கையால் அனைவரையும் விழிவிரிய வைக்கிறார்.