தன் உயிரைக் கொடுத்து மகனின் உயிரைக் காப்பாற்றிய தாயின் பாசத்தைக் கண்டு ரயில் பயணிகள் அனைவரும் கண்ணீர் வடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொன்பாடி மேட்டுக் காலனியைச் சேர்ந்தவர் லட்சுமணன், இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி ரேவதி. இவர்களது மகன் தனுஷ்(12). குடும்பத்துடன் சென்னைக்குச் செல்ல வீட்டிலிருந்து மூவரும் இருசக்கர வாகனத்தில் திருத்தணி ரயில் நிலையம் வந்தடைந்தனர். இருசக்கர வாகனத்தை பார்க்கிங் செய்து விட்டு வர லட்சுமணன் சென்றுள்ளார்.
அதே நேரத்தில் தண்டவாளத்தை கடந்து நடைமேடைக்குச் செல்ல ரேவதி மற்றும் அவரது மகனான தனுஷ் முயன்றுள்ளனர். அப்போது அதே தண்டவாளத்தில் வேகமாக திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் வருவதை பார்த்து அங்கிருந்த ரயில் பயணிகள் கூச்சலிட்டனர். உடனடியாக விபத்திலிருந்து மகனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட ரேவதி மகனை தூக்கி நடைமேடை ஏற்றியுள்ளார். ஆனால் தான் ஏறுவதற்கு முன்பாக வேகமாக வந்த ரயில் ரேவதி மீது மோதியது. இதில் ரயிலில் சிக்கி உடல் சிதறி ரேவதி இறந்தார்.
மரணம் கண் எதிரில் இருந்தபோதும் தனது மகனைக் காப்பாற்றி உயிர் விட்ட தாயின் பாசத்தைக் கண்டு பயணிகள் அனைவரும் கண்ணீர் வடித்தனர். அரக்கோணம் ரயில்வே போலீசார் இறந்த பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அத்துடன் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.