தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த குட்டியை 2 மணி நேரம் போராடி மீட்ட தாய் யானையின் பாசப் போராட்டம், காண்போரை நெகிழச் செய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், தொளுவபெட்டா கிராமம் அருகே சுற்றித் திரிந்தன. அப்பகுதியில் உள்ள தன்ணீர் தொட்டியில் நீர் அருந்தச் சென்ற குட்டி யானை ஒன்று, எதிர்பாராத விதமாக அதனுள் தவறி விழுந்தது. தொட்டியில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த குட்டியை மீட்பதற்காக, பிற யானைகள் முயற்சித்தன.
சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினரைக் கண்டதும் மற்ற யானைகள் காட்டுக்குள் சென்றுவிட்ட நிலையில், தாய் யானை மட்டும் அங்கிருந்து செல்லவில்லை. தாயை விரட்டிவிட்டு குட்டியை மீட்க வனத்துறையினர் முயற்சித்தனர். ஆனால் வனத்துறையினரை அருகில் நெருங்கவிடாத தாய் யானை, 2 மணி நேரமாக போராடி தண்ணீர் தொட்டியில் இருந்து குட்டியை மீட்டுச் சென்றது. தாய் யானையின் இந்த பாசப் போராட்டம் காண்போரை நெகிழ வைத்தது.