கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை கடிதத்தையும், ஜிப்மர் ஆய்வறிக்கை நகல்களையும் மாணவியின் தாயார் செல்வி தன்னிடம் வழங்ககோரி மனு தாக்கல் செதிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தர இயலாது என விழுப்புரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மாணவியிடம் எந்த செல்போனும் இல்லை என்றும், விடுதியில் தங்கி இருந்தபோது அவர் பயன்படுத்தியது ஆசிரியர்களின் செல்போன்தான் என்றும், மாணவியின் தாயார் செல்வி பேட்டியளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், மாணவியின் தற்கொலை கடிதம் - ஜிப்மர் ஆய்வு அறிக்கை உடற்கூறு ஒளிப்பதிவு காட்சிகள் மற்றும் மாணவியின் பெரியப்பா செல்வத்தின் செல்போன் உள்ளிட்டவைகளை ஒப்படைக்க கோரி மாணவியின் தாயார் செல்வி வழக்கறிஞர் தரப்பு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி வழக்கு விசாரணை நடைபெறுவதால் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கேட்கப்பட்ட ஆவணங்களின் நகல்கள் வழங்கப்பட இயலாது என்று தெரிவித்தார்.
பின்னர் மாணவியின் தாயார் செல்வி பேசுகையில், “சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெறவில்லை. விசாரணை குறித்து எந்த தகவல்களும் எனக்கு வழங்கப்படுவதில்லை. பெற்ற தாய் எனக்குகூட வழங்கப்படுவதில்லை. ஜிப்மர் ஆய்வறிக்கையும் தற்போது வரை வழங்கப்படவில்லை. ஜிப்மரின் ஆய்வறிக்கை எதுவும் தற்போது வரை வழங்கப்படாததால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வந்துள்ளோம். என் மகள், பள்ளி விடுதியில் எந்த செல்போனும் பயன்படுத்தவில்லை என்பதை ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டோம். அவர் எங்களிடம் பேசுவதற்கு பள்ளி ஆசிரியர்களின் செல்போன்களை தான் பேசுவதற்கு பயன்படுத்தினார்.
உண்மைகள் இங்கயே கொட்டிக்கிடக்குது. இவங்க எதையுமே கண்டுக்க மாட்டேங்கிறாங்க. கொலைகாரனுக்கு பின்னே நிற்கிறார்கள். கைரேகை எடுத்துப்போனது, அறுந்து போன செயினுக்கு காரணம், வயிற்றில் விஷமிருந்தது என எதற்குமே பதில் சொல்ல மாட்டேனேன இருக்கிறார்கள்” என காட்டமாக பேசினார்.