கன்னியாகுமரியில் பிறந்த குழந்தையை கொலை செய்த தாய் pt
தமிழ்நாடு

கன்னியாகுமரி| பிறந்த குழந்தையிடம் அதிக பாசம் காட்டிய கணவர்.. தாய் செய்த கொடூர செயல்!

தன்னை விட குழந்தையிடம் கணவர் அதிக பாசம் காட்டியதால் பச்சிளம் குழந்தையின் வாயில் டிஷ்யூ பேப்பரை திணித்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த 42 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது.

குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் பெனிட்டா ஜெய அன்னாள் (21). இவரும் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் காதலித்து திருமணம் செய்து திண்டுக்கல் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பெனிட்டா ஜெய அன்னாள்-கார்த்திக் தம்பதிக்கு கடந்த 42 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. காதலித்து திருமணம் செய்துகொண்டதால் பெனிட்டா ஜெய அன்னாள் உடன் அவரது பெற்றோர்கள் தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளனர். குழந்தை பிறந்த பின்பு கணவர் குழந்தை மீது அதிக பாசமாக இருந்ததால், மனைவி பெனிட்டாஜெய அன்னாள் சொந்த ஊருக்கு குழந்தையுடன் வந்து தாய் தந்தையுடன் இருந்துள்ளார்.

தாய் செய்த கொடூர செயல்..

இந்த நிலையில் தனது மனைவி மற்றும் பிறந்த குழந்தையை பார்க்க கார்த்திக் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஆசையாக வந்து குழந்தையை பார்த்தபோது குழந்தை அசைவற்ற நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை இறந்துவிட்டதாக கூறி உள்ளனர்.

தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் கருங்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்து போலீஸ் குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனையில் குழந்தை கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சிக்குரிய உண்மை தெரியவந்தது.

பெனிட்டா ஜெய அன்னாள்

உடனடியாக குளச்சல் ஏ எஸ் பி தலைமையில் போலீஸ் குழந்தையின் தாயாரிடம் நடத்திய விசாரணையில், தனது கணவர் குழந்தை பிறந்த பிறகு தன்னுடன் பாசம் காட்டாமல் குழந்தையிடம் பாசம் காட்டி வருவதால் குழந்தை வாயில் டிஷ்யூ பேப்பரை வைத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். பிறந்து 42 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாய் பெனிட்டா ஜெய அன்னாளை போலீஸார் கைதுசெய்தனர். பெற்ற தாயே பச்சிளம் குழந்தையை கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.