இரண்டாவது திருமண வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததாக, முதல் கணவருக்குப் பிறந்த குழந்தையை தாயே கொன்று புதைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டையை அடுத்த பாக்குபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் காவ்யா. இவருக்கும் சிப்காட் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு, 6 வயதில் தருண் என்ற மகன் இருந்தார். ராஜேந்திரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, காவ்யா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் பிரிந்தார்.
இந்நிலையில் காவ்யாவுக்கு இராணிப்பேட்டை இராஜிவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவருடன் நட்பு ஏற்பட்டு, அவரைக் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. இருவரும், வாலாஜாப்பேட்டையில் உள்ள பெல்லியப்பா நகரில் குடியேறியுள்ளனர். 2-வது திருமண வாழ்க்கைக்கு, குழந்தை தருண் இடையூறாக இருப்பதாக கருதிய தியாகராஜனும், காவ்யாவும் சேர்ந்து, தருணை நீரில் மூழ்கடித்து கொலை செய்ததோடு, உடலை பாலாற்றில் புதைத்துள்ளனர்.
இதுதொடர்பான தகவலின் பேரில், தியாகராஜன் மற்றும் காவ்யாவை கைது செய்த வாலாஜாபேட்டை காவல் துறையினர், பாலாற்றில் புதைக்கப்பட்ட தருண் உடலை தோண்டி எடுத்தனர். முறையற்ற உறவு காரணமாக, சென்னை அருகே குன்றத்தூரில், இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக, அபிராமி என்ற பெண் கைதாகியது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் ஒரு இளந்தாய் 2-வது கணவருடன் இணைந்து பெற்ற மகனையே கொன்றது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.