கடலூர் மாவட்டம் மீராளூரில் 3 பெண் குழந்தைகளை பெற்ற தாயே கால்வாயில் தூக்கி வீசியது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் - சத்தியவதி தம்பதிக்கு 3 மகள்கள் இருந்தனர். மணிகண்டனுக்கு மதுப் பழக்கம் இருந்ததாகவும், அதன் காரணமாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. வழக்கம்போல சண்டையின்போது கணவரிடம் கோபித்துக் கொண்டு 3 மகள்களையும் அழைத்துக் கொண்டு கீழமணக்குடியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சத்தியவதி புறப்பட்டுள்ளார். வழியில் மீராளூரில் பேருந்தில் இருந்து இறங்கிய சத்தியவதி மகள்களுக்கு திண்பண்டம் வாங்கிக் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து 3 மகள்களையும் கால்வாயில் தூக்கி வீசியதாகத் தெரிகிறது.
தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற காவல்துறையினர் சத்தியவதியை கைது செய்தனர். கால்வாயில் வீசப்பட்ட 3 பேரில் 6 வயது அட்சயா, 5 வயது நந்தினி ஆகியோர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 2 வயது சிறுமி தர்ஷிணியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். குடும்பப் பிரச்னை காரணமாக குழந்தைகளை கால்வாயில் வீசிவிட்டு சத்தியவதி தற்கொலை செய்து கொள்ள முயன்றாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.