ஓமலூர் அருகே வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் மாமியாருக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பச்சனம்பட்டி கிராமம் ராமர்குட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிமுருகன். இவரது மனைவி வள்ளி. இவர்களது மகன் சம்பந்தமூர்த்திக்கும் மேச்சேரியில் உள்ள சாம்ராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த முனுசாமி-சிவகாமி தம்பதியின் மகள் மீனாவுக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லாத நிலையில், மீனாவை வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதனால், மனமுடைந்த மீனா கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 17ம் தேதியன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து ஓமலூர் போலீசார் மீனாவின் கணவர் சம்பந்தமூர்த்தி, மாமியார் வள்ளி, மாமனார் பழனிமுருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, மீனாவின் மாமியார் வள்ளிக்கு ஏழாண்டு சிறை தண்டனையும், 65 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் உத்தரவிட்டார். மேலும், வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்த கணவர் சம்பந்தமூர்த்தி, மாமனார் பழனிமுருகன் ஆகிய இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்தும் உத்தரவிட்டார்.