திருப்பூர் ரிதன்யா தற்கொலை pt
தமிழ்நாடு

ரிதன்யா மரணம்| மாமியார் சித்ராதேவியும் சிறையில் அடைப்பு!

புதுமணப்பெண் ரிதன்யா உயிரிழந்த விவகாரத்தில் கணவர், மாமனார் சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து மாமியார் சித்ராதேவியும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Rishan Vengai

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதுமணப்பெண் ரிதன்யா தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ பதிவுகள் அனுப்பிவிட்டு, காரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திருமணமான 78 நாட்களில் இளம் பெண் ரிதன்யா வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், கணவர், மாமனார், மாமியார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். மாமியார் சித்ராதேவி மட்டும் உடல் நல குறைவு காரணமாக பைண்டிங் ஆர்டர் முறையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

ரிதன்யா தற்கொலை

இந்த சூழலில் முக்கிய நபரான மாமியார் சித்ராதேவியும் வெளியே இருக்கக்கூடாது, அவரையும் கைது செய்து 3 பேருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று ரிதன்யாவின் பெற்றோர் கோரிக்கை வைத்து வந்தனர். அதோடு அப்பகுதி மக்களிடையேயும் மாமியார் சித்ராதேவி கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

இந்நிலையில் ரிதன்யாவின் மாமியாரும் தற்போது கைசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ரிதன்யாவின் மாமியார் சிறையில் அடைப்பு..

ரிதன்யாவின் பெற்றோர் மனு அளித்திருந்த நிலையில் மாமியார் சித்ராதேவியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ரிதன்யா தற்கொலை

இதையடுத்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்ட பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுமணப்பெண் உடலளவிலும், மனதளவிலும் சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட 3 பேருக்கும் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பாக இருந்துவருகிறது.