ஓசூர் அருகே தொட்டியில் விழுந்த குட்டி யானையை தாய் யானை ஒன்று தனியாக போராடி மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுவுள்ளன. அந்த யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்த 7 யானைகள் 3 மாத குட்டி யானையுடன் தொளுவபெட்டா அருகே உள்ள பசவேஸ்வரா சுவாமி கோயிலின் தொட்டியில் தண்ணீர் குடிக்க சென்றன. அப்போது எதிர்பாராத விதமாக 3 மாத குட்டியானை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. அந்தக் குட்டி யானை மேலே வரமுடியால் தவித்து போராடிய நிலையில், மற்ற யானைகள் ஒன்றாக அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டன.
தகவல் அறிந்து வந்த தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர், யானைகளை விரட்டி விட்டு குட்டி யானையை மீட்க ஜேசிபி வாகனத்தை எடுத்து வந்தனர். வனத்துறையினர் விரட்டியதில் 6 யானைகளை வனப்பகுதிக்குள் ஓடிவிட்டனர். ஆனால் குட்டி யானையின் தாய் யானை மட்டும் அங்கிருந்து செல்லாமல் பாசப் போராட்டத்தில் ஈடுபட்டது.
மேலும் ஜேசிபி எந்திரம் மூலம் குட்டியானையை மீட்க வந்த வனச்சரகர்களை அருகே வரவிடாமல், தாய் யானை மட்டும் சுமார் 2 மணி நேரம் போராடி தான் குட்டி யானையை மீட்டது. பின்பு குட்டி யானையுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வனத்திற்குள் ஓடியது. இந்த நிகழ்ச்சி காண்போரை நெகிழச் செய்தது.