மழைநீர் வடிகால் குழாயில் குட்டிகள் தவறி விழுந்ததால், தாய் நாயின் அழுகுரலை கேட்ட பொதுமக்கள், குழாயை உடைத்து குட்டிகளை மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் சென்னை அருகே நிகழ்ந்துள்ளது.
ஆவடி அருகே திருமுல்லைவாயில் பாரதி நகரைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவரின் வீட்டின் அருகே தெருநாயின் அழுகுரல் கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. மழைநீர் வடிகால் குழாயை பார்த்தவாறே தெருநாய் குறைத்துக் கொண்டிருந்ததால், அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, அதில் நாய் குட்டிகள் சிக்கியிருந்தது தெரியவந்தது.
தாய் நாயின் பரிதவிப்பைக் கண்டு, சற்றும் தாமதிக்காத அப்பகுதி மக்கள், ட்ரில்லிங் இயந்திரம் உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு குழாயை உடைத்து, 5 நாய்க் குட்டிகளை ஒவ்வொன்றாக மீட்டனர். அதில் ஒரு நாய்க்குட்டி இறந்த நிலையில் மீட்கப்பட்டது. குட்டிகளை கண்ட தாய் நாய், அவற்றை நாவினால் வருடிக் கொடுத்து பாசத்தை வெளிப்படுத்தியது.