தமிழ்நாடு

தற்கொலை முயற்சிக்கு தள்ளிய கடன் தொல்லை - பறிபோனது பயிற்சி மருத்துவரின் உயிர்!

webteam

கடன் தொல்லையால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் தாய் மற்றும் மகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் பயிற்சி மருத்துவராக உள்ள மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நாராயணசாமி சுமித்திரா தம்பதியினரின் ஒரே மகள் மதுமிதா (26). இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு முடித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் மகளின் மருத்துவ படிப்பு மற்றும் புதிதாக வீடு கட்ட வாங்கிய கடன் என ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மதுமிதாவின் தந்தை நாராயணசாமி கடந்த ஓராண்டிற்கும் மேலாக வேலைக்குச் செல்லாமல் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் மதுமிதாவின் தாய் தந்தை இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மதுமிதா மற்றும் அவரது தாய் சுமித்ரா ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து பயிற்சி மருத்துவரான மதுமிதா பூச்சி மருந்து விஷத்தை சாப்பிட்டுள்ள நிலையில், தாய் சுமித்ரா சர்க்கரை நோய் மாத்திரைகளை அதிக அளவு எடுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து அறிந்த உறவினர்கள், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு போராடிய தாய் மகள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், அதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்த மதுமிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் தாய் சுமித்ரா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக பெரியகுளம் தென்கரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் இருவருடைய தற்கொலைக்கும் காரணம் மதுமிதாவின் தந்தை மற்றும் தந்தையின் உறவினர்கள் எனக் கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து பெரியகுளம் தென்கரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.