தமிழ்நாடு

தாய், பெண் குழந்தை மர்ம மரணம் - சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார்

webteam

அரக்கோணம் அருகே தாய் மற்றும் குழந்தை மர்மமான முறையில் இறந்த விவகாரம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மோசூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் - தனலட்சுமி ஆகியோரின் மகன் சதீஷ். இவர் சென்னை மாநகர பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகின்றார். இவருக்கும் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ரம்யா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அஸ்வதி (2) என்ற பெண் குழந்தை இருந்தது.

நேற்று மாலை ரம்யா மற்றும் குழந்தை அஸ்வதி (2) ஆகிய இருவரும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மாமனார் கூறியதையடுத்து, அரக்கோணம் நகர காவல்துறையினர் இருவரின் சடலத்தை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்டமாக சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில், தகவலறிந்து வந்த ரம்யாவின் தந்தை சேகர் மற்றும் தாய் கவிதா ஆகியோர், தனது மகள் மற்றும் பேத்தியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறினர். தனது மகளை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர். புகாரினை பெற்ற காவல்துறையினர், குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரனை நடத்தி வருகின்றனர். 

திருமணமாகி மூன்று ஆண்டுகளில் இளம் பெண் மற்றும் அவரது பெண் குழந்தை இறந்ததால், இந்த வழக்கை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அரக்கோணம் டிஎஸ்பி ஆகியோரும் தனித்தனியாக விசாரிக்கவுள்ளனர்.