சென்னையில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை துரைப்பாக்கத்தில் சில வருடங்களுக்கு முன்னர் கஞ்சா வியாபாரம் செய்து வந்தவர் செந்தில் (39). இவரை போலீசார் தேடி வந்தனர். ஆனால் கேளம்பாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த இவர், போலீசாரிடம் சிக்காமல் 4 வருடங்களாக தொடர்ந்து கஞ்சா வியாபாரம் செய்து வந்தார். இவர் மூலமாக கிலோ கணக்கில் நாள் தோறும் கஞ்சா விற்பனை நடைபெற்று வந்திருக்கிறது.
இந்நிலையில் கேளம்பாக்கம் பகுதியில் செந்தில் சுற்றித் திரிவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனே தேடுதல் வேட்டையை துவங்கிய தனிப்படை போலீசார், செந்திலை கஞ்சாவும் கையுமாக பிடித்தனர். பின்னர் செந்திலை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். செந்திலிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்ற தேடுதல் வேட்டையை போலீசார் தொடரவுள்ளனர்.