தமிழ்நாடு

''நீட் வேண்டாம் என்பதே பெரும்பாலானோர் கருத்து'' - ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்

''நீட் வேண்டாம் என்பதே பெரும்பாலானோர் கருத்து'' - ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்

webteam

நீட் தேர்வு குறித்து இதுவரை 25 ஆயிரம் கடிதங்கள் மின்னஞ்சல் மூலமாக வந்திருப்பதாகவும், அதில் பெரும்பாலானோர் நீட் வேண்டாம் என கருத்து தெரிவித்திருப்பதாகவும் ஆய்வுக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நீட் தேர்வு குறித்து இதுவரை 25,000 கடிதங்கள் வந்துள்ளன. நீட் தேர்வு குறித்து வந்த கடிதங்களில் பெரும்பாலானோர் வேண்டாம் என கூறியுள்ளனர். ஒரு சிலர் மட்டுமே நீட் தேர்வு வேண்டுமென கூறியிருக்கிறார்கள். ஒரு சிலர் 2 ஆண்டுகளுக்கு மட்டும் நீட் தேர்வு வேண்டாமென தெரிவித்துள்ளனர்.

ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசாணை உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய முயற்சிப்போம். ஆய்வுக்குழுவிற்கு கால நீட்டிப்பு கேட்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. அனைத்து தரப்பினரின் கருத்துக்களை அறிந்தபிறகு அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்வோம். இன்னும் சில தகவல்கள் கிடைக்க வேண்டியுள்ளது. அந்த தகவல்களையும் சேர்த்து முடிவெடுப்போம். அரசு கொடுத்துள்ள குறிப்புகளுக்கு மட்டுமே அறிக்கையில் விளக்கம் கொடுக்கப்படும்” என்று கூறினார்.