கடந்த வார அரசியலின் ஹாட் டாக் என்றால் அது மதிமுகதான். கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் மதிமுகவில் பயணித்த அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மீது அக்கட்சியின் பொதுச்செயலாளர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். வைகோவின் பேச்சு மதிமுகவில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது.
சலசலப்புகளுக்கெல்லாம் உச்சக்கட்டமாக, “என்னுடன் மல்லை சத்யா பல போராட்டங்களில் பங்கேற்றதற்காக, அவர் துரோகம் செய்யவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது” என வைகோ சொன்னது மதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்வினை ஆற்றிய மல்லை சத்யா, “துரோகி பட்டம் கொடுத்து வெளியேற்ற பார்க்கிறார் வைகோ. குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் கொடுக்கிறார். வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை வாரிசு அரசியலுக்காக துரோகி என சொல்லும் அளவுக்கு துணிந்துள்ளார்” என வருத்தம் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்திருந்த மல்லை சத்யா, வைகோ வின் குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டுக் கண்ணீர் விட்டார். பின்னர் அவர் புதிய கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. திராவிட இயக்க கொள்கைகளோடு தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் அமைப்பாக அது இருக்கும் என கூறப்படுகிறது. அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான் மல்லை சத்யாவை துரோகி எனும் பொருள்படும்படி வைகோ குறிப்பிட்டதற்கு மதிமுகவினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகர மதிமுக சார்பில் நகர செயலாளர் பாபு ஏற்பாட்டில் - மல்லை சத்யா குறித்து வைகோ கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து - தங்களது வாகனங்களில் இருந்த மதிமுக கொடியை 100 க்கும் மேற்பட்ட மதிமுகவினர் அகற்றி தலையை சுற்றி தூக்கி எறிந்து அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். மதிமுக கட்சிக்கு அடையாளம் காட்டியவர் மல்லை சத்யா என்றும் அக்கட்சியில் 32 ஆண்டுகள் பயணித்துள்ளதாகவும் அவருடன் இணைந்து களத்தில் நாங்கள் பணியாற்றி உள்ளோம் என்றும் தற்போது தனது மகனுக்கு முடிசூட்ட வைகோ நினைக்கிறார் அதனால் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை துரோகி என கூறி மாத்தையாவோடு ஒப்பிட்டு விமர்சித்து வைகோ பேசியுள்ளார். இதை வன்மையாக கண்டிப்பதுடன் செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் தங்களது வாகனத்தில் உள்ள அக்கட்சியின் கொடியை அகற்றி மதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.