தமிழ்நாடு

மெரினாவில் குவிந்த காவல்துறையினர் : கழுகு போல் கண்காணிப்பு

webteam

சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழ் அமைப்புகளின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அத்துடன் முள்ளிவாய்க்கல் நினைவேந்தலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மே 17 இயக்கம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டு, காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், சென்னையில் போராட்டம் நடத்துவதற்கும், நினைவேந்தல் செலுத்துவதற்கும் குறிப்பிட்ட இடங்கள் காவல்துறையால் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் அனுமதி கோராமல், மெரினா கடற்கரையில் அனுமதி கோரியதால், அனுமதி தர முடியாது எனக்கூறி காவல்துறை மறுத்துவிட்டது.

இந்நிலையில் இன்று மெரினா கடற்கரையில் மே 17 உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் சார்பில், காவல்துறை கட்டுப்பாட்டை மீறி நினைவேந்தல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது. அத்துடன் மே 17 இயக்கும் நடத்தும் நிகழ்ச்சிக்கு ஆதரவளிப்போம் என சில அரசியல் கட்சிகளும் தெரிவித்திருந்தன. இந்நிலையில் நினைவேந்தல் நிகழ்ச்சி எதுவும் நடக்கமால் தடுக்க, மெரினாவில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேப்பியர் மேம்பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், அந்தப் பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பாரதி சாலை முழுவதும் தடுப்புகள் அமைத்து, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. தடையை மீறி யாரேனும் மக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் பாரதி சாலையில் தமிழ் அமைப்பினர் பலர் கையில் நினைவேந்தல் பதாகைகளுடன் வருகை தந்துள்ளனர்.