தமிழ்நாடு

சென்னையில் நடக்கும் தொடர் செல்போன் பறிப்பு - காவல்துறை எச்சரிக்கை

சென்னையில் நடக்கும் தொடர் செல்போன் பறிப்பு - காவல்துறை எச்சரிக்கை

webteam

சென்னையில் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

சென்னையில் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த சில நாட்களாக சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இன்று ஒரே நாளில் கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், சூளைமேடு, அரும்பாக்கம், அசோக் நகர், திருமங்கலம் மற்றும் கோயம்பேட்டு உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் செல்போன் பறிப்பு குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இருசக்கர வாகனங்களில் வரும் கொள்ளையர்கள், செல்போன் பேசிக்கொண்டு நடந்து செல்பவர்கள் மற்றும் செல்போன் பயன்படுத்திக்கொண்டு பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் நிற்பவர்களிடம் செல்போனை பறித்துக்கொண்டு செல்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையில் தனியாக செல்பவர்கள் மற்றும் ஆள்நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை மறித்து அவர்களிடம் செல்போன், பணம் மற்றும் நகைகளை பறித்து செல்கின்றனர். சில இடங்களில் கத்தியால் மக்களை தாக்கிவிட்டும் செல்போன்களை பறித்துச் செல்கின்றனர். இதுதொடர்பாக கூறும் காவல்துறையினர், இந்தக் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், ஒரே கும்பலாக இருக்கலாம் என சந்தேகித்துள்ளனர். அத்துடன் சாலையில் செல்போன் பயன்படுத்திக்கொண்டு செல்ல வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.