தமிழ்நாடு

நாகையில் வெள்ளம்... தஞ்சையில் வறட்சி... விவசாயிகள் வேதனை

webteam

வடகிழக்குப் பருவமழைக் காலம் காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களுக்கு பொதுவாக நல்ல பலன் தருவதாக அமையும். ஆனால் இதற்கு முரணாக, நாகையில் மழை வெளுத்து வாங்கிய நிலையிலும், தஞ்சையில் பயிர்கள் கருகும் அளவுக்கு வறட்சி காணப்படுகிறது.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டத்திற்கு சம்பா சாகுபடிக்காக கடந்த ஆண்டு தண்ணீர் திறந்து பாதியில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் லட்சக்கான ஏக்கர் சம்பா பயிர் காய்ந்து கருகியது. இந்த ஆண்டு மேட்டூரில் நீர்மட்டம் 90 அடியை தாண்டிய நிலையில் கடந்த மாதம் 2 ஆம் தேதி டெல்டா மாவட்ட சாம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய உடன் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆனால், தஞ்சை மாவட்டத்தில் போதுமான அளவுக்கு மழை பெய்யாத நிலையில், தஞ்சை கல்லணையின் தலைமடை பகுதியிலேயே தண்ணீர் வராத நிலையில் சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது.

கடந்த ஆண்டு சாகுபடி செய்து காய்ந்து போன நிலையில் நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டும் சாகுபடி காய்ந்து வருவதாகவும் விவசாயிகள் கூறுகிறார்கள். பூதராயநல்லூர், ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்ய முடியாமலும், விடப்பட்ட நாற்றும் காய்ந்து வருவதால் உடனடியாக தண்ணீரை திறக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

இந்நிலையில் கனமழை காரணமாக, நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீரில் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மூழ்கி பாதிக்கப்பட்டதால், நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.