தமிழ்நாடு

பொதுமக்களை கடித்து குதறும் கொடூர குரங்கு : திணறும் வனத்துறை

webteam

சீர்காழி அருகே பொதுமக்களை கடித்து குதறும் கொடூர குரங்கை பிடிக்க கால்நடை குழுவும், வனத்துறையினரும் விடிய விடிய மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த தென்னலக்குடி காளியம்மன் கோயில் தெருவில் சில நாட்களுக்கு முன்பு வந்த ஒற்றை குரங்கு எதிரில் வருபவர்களை கடிக்க தொடங்கியுள்ளது. மேலும் அந்த ஒற்றை குரங்கு வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத்தியதுடன்,  அங்கிருக்கும் முதியவர்களையும்   குழந்தைகளையும் கடித்து காயப்படுத்தி வருகிறது. இதனால் குரங்கை பிடிக்க வனத்துறையினர் முயற்சி செயதனர். ஆனால் அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.

இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் திருவாரூரில் இருந்து குரங்கை பிடிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த குழுவினர் வரவழைக்கப்பட்டனர். மேலும் குரங்கு கடித்து காயம் அடைந்தவர்களுக்கு கிராமத்திலேயே சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம் அமைக்கபட்டு அதற்காக மருத்துவ குழுவினரும் வருகை தந்துள்ளனர். 

இந்நிலையில் அந்த குழுவினர் கிராமத்தின் பல பகுதிகளில் சுருக்குகள் வைத்தும், கூண்டு மற்றும் வலைகள் வைத்தும் குரங்கை பிடிக்க முயன்றனர். அதுவும் தோல்வியடைந்த நிலையில் மயக்க ஊசி செலுத்தி குரங்கை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்காக நாய் ஒன்றினை குரங்கு வரும் பாதையில் கட்டி வைத்து அதன் மூலம் குரங்கை பிடிக்க கால்நடை  மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறையினர் விடிய விடிய தென்னலகுடி கிராமத்திலேயே முகாமிட்டனர். ஆனால் அதுவும் பலனளிக்காமல் தோல்வியில் முடிந்துள்ளது.