தமிழ்நாடு

என் வீட்டில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

Rasus

வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் என் வீட்டில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று காலை 6 மணிக்கு சோதனையை தொடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை 4 மணி வரை சோதனை நடத்தினர். சுமார் 22 மணிநேரம் நீடித்த இந்த சோதனையின்போது வருமானவரித்துறை அதிகாரிகள், பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது. மேலும் விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாருக்கு பணம் கொடுக்கப்பட்டதா என்பது பற்றியும் ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சோதனை நிறைவடைந்து இன்று காலை அதிகாரிகள் புறப்பட்டுச் சென்ற பின் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக தெரிவித்தார். பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நபர் தனது உதவியாளர் இல்லை எனவும் அவர் கூறினார்.

எனது சொந்த ஊரில் நடைபெற்ற சோதனையிலும் என் வீடு மற்றும் என் சகோதரர் வீட்டில் நடைபெற்ற சோதனையிலும் பணம் ஆவணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் என் வீட்டிலும் சரத்குமார் வீட்டிலும் வருமானவரி சோதனை நடந்தது என விஜயபாஸ்கர் கூறினார்.