காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில், சுமார் 21 கோடி ரூபாய் கடன் மோசடி நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மகளிர் சுய உதவிக்குழு கடன், நகைக்கடன், சிறு வணிகக் கடன் என்ற பெயர்களில் பல்லாவரம், போரூர் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் கடந்த 2010, 2011-ம் ஆண்டுகளில் 20 கோடியே 69 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, கூட்டுறவு வங்கியின் முன்னாள் ஊழியர் பாபு என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இம்மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கூட்டுறவுத்துறை சார்பிலும், வேண்டுமானால் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அரசுத் தரப்பிலும் வாதிடப்பட்டது.
அரசுத்தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர். சிபிஐ வசம் ஏராளமான வழக்குகள் உள்ளதால், இவ்வழக்கை விசாரிக்க காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கவில்லை எனக் கூறிய நீதிபதிகள், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.