தமிழ்நாடு

மொய் விருந்து வரவு கணக்கை பதிவு செய்ய ‘மொய் டெக்’ சாப்ட்வேர்

Rasus

புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் நடைபெற்று வரும் மொய் விருந்து நிகழ்ச்சிகளில் கணினி தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது வரவேற்பை பெற்று வருகிறது.

புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களை கைதூக்கிவிடும் விதமாக ஆனி மாதம் தொடங்கி மொய் விருந்து நடப்பது வழக்கம். தற்போது புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், கீரமங்கலம், குலமங்கலம், மறமடக்கி உள்ளிட்ட பகுதிகளில் மொய் விருந்து விழாக்கள், நாள் தோறும் நடைபெற்று வருகின்றன. இதுநாள் வரையில் மொய் எழுதுவதற்கென்று தனி எழுத்தர்கள் அல்லது படித்த இளைஞர்களை கொண்டு பெரிய நோட்டுக்களில் எழுதி வந்தனர். இந்த‌நிலையில் தற்போது கணினி மூலம் மொய் எழுதும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக இளைஞர்கள் உதவியுடன் ‘மொய் டெக்’ என்னும் சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து ‘மொய் டெக்’ சாப்ட்வேரை உருவாக்கிய இளைஞர்களில் ஒருவரான சரணவன் கூறுகையில், “மொய் டெக் என்ற நிறுவனம் மதுரை மாவட்டங்களில் நடக்கும் திருமணம் காதணி விழா போன்ற விஷேசங்களில் மொய் எழுதுவதற்காக தொடங்கப்பட்டது. தற்போது புதுக்கோட்டை தஞ்சை மாவட்டங்களில் அதிக அளவில் மொய் விருந்துகள் நடப்பதாக தகவல் அறிந்து இங்கு வந்து விழா நடத்தும் மக்களை அணுகினோம். கடந்த ஆண்டு மேற்கொண்ட சோதனை முயற்சி வெற்றி அடைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு நாள்தோறும் பல்வேறு இடங்களில் கணினி மூலம் மொய்களை பதிவு செய்து கொடுத்து வருகிறோம். இதன் மூலம் நல்ல வருவாய் கிடைப்பதோடு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது” எனக் கூறினார்.

மொய் விருந்து விழாக்கள் என்பது கலாச்சாரம் சார்ந்த பழமையான விழாக்கள் என்றாலும் மக்களின் வசதிக்காக தேவைக்கேற்ப அதில் புதுமையை புகுத்தி மொய் விருந்து விழாக்களையும் கணினி மயமாக மாற்றி வருகின்றனர் புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லையோர கிராம மக்கள்.

சுப.முத்துப்பழம்பதி ( புதுக்கோட்டை செய்தியாளர்)