தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்த செய்தி தனக்கு மிகுந்த வேதனை தருவதாகவும், அவர்களுக்கு தனது இரங்கலை தெரிவிப்பதாகவும் ட்விட்டர் வழியாக குறிப்பிட்டுள்ள பிரதமர், சிகிச்சையிலிருப்போர் விரைந்து நலம் பெறவேண்டி பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுமென்றும், அது பிரதமர் நிதியிலிருந்து தரப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதவிர சிகிச்சையில் இருப்போருக்கு ரூ.50,000 நிதியுதவி தர இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் மற்றும் இழப்பீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். தமிழ்நாடு அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தஞ்சைக்கு நேரில் செல்வதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி: தஞ்சை தேர் விபத்து: நேரில் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; இழப்பீடு தொகையும் அறிவிப்பு
முதல்வர், பிரதமரை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் விபத்தில் இறந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்திருக்கும் அவர், `தஞ்சையில் சிறுவர்கள் உட்பட பலர் மின்கசிவால் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்த தகவல், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை அளிக்கிறது.
உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள், விரைவில் நலம்பெற பிராத்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.