தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் தான், அக்கட்சியின் நிர்வாகிகள் தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தில் பிரதமர் மோடி தொடர்ச்சியான பொதுக்கூட்டத்தில் ஈடுபடுவது அதிமுக - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பலத்தை ஏற்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
அந்தவகையில், நாளை மறுநாள் (பிப்ரவரி 15) கன்னியாகுமரியிலும், பிப்ரவரி 18 அன்று கோயம்புத்தூரிலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் என்.டி.ஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதற்கிடையில் தான், இன்று தமிழகத்தைச் சேர்ந்த பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடியிருக்கிறார். அதில், தேர்தலுக்கு தயாரவது குறித்தும் தேர்தல் பொறுப்பாளர்களின் பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.
தொடர்ந்து அக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ”ஒரு காலத்தில் மத்தியில் திமுக அங்கம் வகித்தபோது, தமிழகத்திற்கு எந்தத் திட்டங்களும் வரவில்லை. எந்த திட்டத்திற்கும் தீர்வு தரவில்லை. பாம்பன் பாலம் குறித்து யாரும் கவனம் செலுத்தாமல் இருந்தனர். தற்போது, பாம்பனில் செங்குத்து தூக்கு பாலத்தை அமைத்துள்ளோம். நம் ஆட்சியில், தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டன. மருத்துவ இடங்கள் இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
நாம் பரப்புரை செய்யும் போது சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். திமுக - காங் ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்குமான வித்தியாசத்தை எடுத்து கூற வேண்டும். சிறிய சிறிய கூட்டங்களை நடத்துங்கள், முதல்முறை வாக்காளர்களை சந்தித்து பேசுங்கள், இரட்டை எஞ்சின் அரசின் அவசியத்தை எடுத்துக் கூறுங்கள். விவசாயிகள் சிறு வியாபாரிகள் ஏழைக்குடும்பங்களுக்கு பல திட்டங்கள் உள்ளன. முத்ரா போன்ற திட்டத்தால் மக்கள் நேரடியாக பயன் பெறுகின்றனர். ஆனால், தமிழகத்தில் சில மத்திய அரசின் திட்டங்களை தடுத்து வருகிறது மாநில அரசு. திமுக அரசின் போக்கால் மத்திய அரசின் வீட்டு வசதி திட்டத்தின் பயன் முழுமையாக தமிழக மக்களை சென்றடையவில்லை.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது , போதைப் பொருள் அதிகம் புழங்குகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் கவலையாக இது உள்ளது. சிறுமிகள் கூட தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுகவினருக்கு இது பற்றி எந்த அக்கறையும் கவலையும் இல்லை. இதில் ரொம்ப வருத்தமான விசயம் இதுபோன்ற செயல்களை ஆதரித்து ஊக்கம் அளித்து பாதுகாப்பது திமுக அரசுதான் .
தமிழகத்தில் பாஜக பூத் பொறுப்பாளர்கள் அதிகளவில் பெண்களை சென்று சந்தியுங்கள். பெண்களை வைத்து சிறிய சிறிய கூட்டங்களை பூத் அளவில் நடத்தி, நமது ஆட்சி அமைந்தால் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என நம்பிக்கை அளியுங்கள்.
தமிழக மக்களுக்கு ஊழல் மீது கடும் கோபம் உள்ளது. அரசுத்துறைகள் வசூல் வேட்டை கூடாரங்களாக உள்ளன. தமிழ்நாட்டில் திமுக அரசில் ஊழல் என்பது அரசின் வழிமுறையாக உள்ளது. கமிசன், கலெக்சன், கரப்சன் என்பதே திமுகவின் அடையாளமாக மாறி விட்டது. தமிழக அமைச்சர்களில யாரெல்லாம் ஊழலில் ஈடுபட்டார்களோ தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்தபிறகு கண்டிப்பாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லியில் ஒரு அரச குடும்பம் உள்ளது. அதே போன்ற அரச குடும்பம் தமிழ்நாட்டிலும் உள்ளது. அவர்கள் தங்கள் குடும்பத்துக்கான அரசைதான் நடத்துகின்றனர் , மக்களுக்கான அரசை அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.