பிரதமர் மோடி
பிரதமர் மோடி புதிய தலைமுறை
தமிழ்நாடு

மக்களவை தேர்தல் 2024 | “தமிழகத்தை திமுக பின்னோக்கி அழைத்து செல்கிறது” - பிரதமர் மோடி

PT WEB

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்தியா முழுவதும் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் நேற்று முதல் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதில் இன்று வேலூரில் பாஜக பரப்புரையின் போது பிரதமர் மோடி திமுகவை குற்றம்சாட்டி பேசினார். அவர் பேசுகையில், “தமிழர்களின் திறமை என்பது, வளர்ந்து வரும் இந்தியாவுக்கு வலிமை சேர்க்கும். ஒட்டுமொத்த திமுகவும் ஒரே குடும்பத்தின் சொத்தாக உள்ளது. ஊழலுக்கு முதல் உரிமை, காப்பீட்டு உரிமையை திமுகதான் வைத்திருக்கிறது.

அதேபோல ஒட்டுமொத்த குடும்பமும் கொள்ளையடிப்பதை செய்துகொண்டிருக்கிறது. தமிழகத்தையே திமுக குடும்பம் கொள்ளையடிக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் மணல் கொள்ளை மட்டும் 4000 கோடி ரூபாய்க்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தை திமுக பின்னோக்கி அழைத்து செல்கிறது. திமுக மக்களை பிரித்தாளும் கொள்கையில் ஈடுபட்டு வருகிறது

திமுக காங்கிரஸின் ஒரே குறிக்கோள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே. அதற்காக திமுக பல பொய்களை சொல்லி வருகிறது. ஏற்கெனவே அவர்கள் ஆட்சியில் இருந்தபோது ஏன் வறுமையை ஒழிக்கவில்லை? பாஜக அரசு கோடிக்கணக்கான மக்களுக்கு இலவச மின்சாரம், குடிநீர் வழங்கியுள்ளது. பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவராக நியமித்தது பாஜகதான்” என்றார்.