திமுகவில் சேர்ந்து விட்டதாக சொல்கிறார்கள், இது கூட்டணி கிடையாது அதற்கும் மேல் புனிதமானது. திமுக எங்கிருந்து வந்தது நீதிக் கட்சியில் இருந்து தானே வந்தது மக்கள் நீதி மய்ய கட்சியிலும் நீதி உள்ளது என கமல்ஹாசன் பேசியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெற்றது.
இதில் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளுக்கு 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள், செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இன்று தொடங்கி 4 நாட்கள் மண்டல வாரியாக ஆலோசனைக் கூட்டம் காலையும் மாலையும் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக இன்று காலை சென்னை மண்டலத்தை சேர்ந்த மண்டல நிர்வாகிகள், அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தொடர்ந்து இன்று மதியம் காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். மக்கள் நீதி மய்ய கட்சியில் சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட 8 மண்டலங்களும் புதுச்சேரி மாநிலமும் உள்ளன.
இன்று முதல் 21 ஆம் தேதி வரை 4 நாட்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை கலை அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
முதல்கட்டமாக காலை நடைபெற்ற சென்னை மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியபோது, திமுகவில் சேர்ந்து விட்டதாக சொல்கிறார்கள் இது கூட்டணி கிடையாது அதற்கும் மேல் புனிதமானது. திமுக எங்கிருந்து வந்தது, நீதிக் கட்சியில் இருந்து தானே வந்தது. மக்கள் நீதி மய்ய கட்சியிலும் நீதி உள்ளது, மய்யத்தின் குரல் எல்லா செவிகளிலும் விழும். மாநிலக் கல்வி கொள்கை நல்ல திட்டம், தமிழருக்கு என்று தனித்தன்மை வேண்டும், அதற்காக தனித்தீவு வேண்டும் என்று சொல்லவில்லை. உங்களால் தீர்க்க முடிந்த பிரச்சினைகளை மட்டுமே நீங்கள் வாக்குறுதிகளாக கொடுங்கள், தீர்க்க முடியாததை சொல்ல வேண்டாம்.
இடது வலது என்று நாட்டைப் பிரிக்க வேண்டாம். ஆசியாவின் முதல் மய்யவாத கட்சி நமது மக்கள் நீதி மய்யம் தான். ராஜ்யசபாவில் நிறைய பேர் என்ன செய்வதென்று தெரியாமல் நமட்டு சிரிப்புடன் அமர்ந்திருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்தில் இருப்பது சுலபம் கிடையாது. Iconic man பின்பு வரும் கூட்டமாக இருக்க கூடாது. எனக்கு பின்பும் இந்த கட்சியில் தலைவர்கள் உருவாக வேண்டும், எனக்கு பின் கட்சி இல்லை என்று அழிந்து விடக் கூடாது.
ஆறாக ஓடிக் கொண்டு இருந்தது எல்லாம் இன்று சாக்கடையாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் நம் பொறுப்பு இல்லை என்று நினைக்கிறீர்களா? தேர்தலுக்குள் என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என்று இருக்கும், ஆனால் திரும்பி பார்த்தால் முடிந்துவிடும். சத்தம் எல்லாம் செயலாக மாற வேண்டும் என்று பேசினார்.
தொடர்ந்து பேசியவர், என் பெயர் கமல்ஹாசன் என்பது நன்றாக தானே இருக்கிறது ஆனால் இயற்பெயர் பார்த்தசாரதி என்று சிலர் கிண்டல் செய்கிறார்கள். ஒரு மகனுக்கு சாருஹாசன், மற்றொரு மகனுக்கு சந்திரகாசன் என்று வைத்துவிட்டு எனக்கு மட்டும் பார்த்தசாரதி என்றா வைப்பார்கள். நான் பார்த்தசாரதியா என்று நான் சொல்லிக் கொள்கிறேன். நான் வாழ்ந்து காட்டி இருக்கிறேன் நீங்கள் சொல்ல வேண்டாம்.
என்னை பார்ப்பனர் என்று அடையாளம் காட்ட வேண்டும் என்று சிலர் என் இயற்பெயர் பார்த்தசாரதி என்பார்கள். நான் பார்ப்பனர் என்று நான் சொல்ல வேண்டும். நான் நடந்து கொள்வதை வைத்து மக்களுக்கு நன்கு தெரியும் நான் யார் என்று. நல்ல வேளை இராமசாமி என்று வைக்காமல் போனார்கள் தாடி வேறு இருக்கிறது.
ஜாதி என்பது எனக்கு இடைஞ்சல். ஜாதி கணக்கெடுங்கள் முதலில் அப்போது தான் தெரியும், யார் எங்கு இருக்கிறார்கள் என்று. தாய் மொழி மிக அவசியம், பேசவில்லை என்றாலும் நமக்கு புரியும். எந்த மொழியை வேண்டுமானாலும் கற்று கொள்ளுங்கள், தாய் மொழியை மறந்துவிடாதீர்கள் என்று பேசினார்.
பாஜகவின் தரப்பில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை? என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, அப்படியானால் அதை நிரூபிக்கட்டும். அது அடிப்படையற்றது என்றால் ஏன் புகாரை ஏற்றுக் கொண்டார்கள்? அது உண்மையற்றது என்றால் அதை நிரூபிக்கட்டும். அதற்கான விளைவுகளைச் சந்திக்க அவர்கள் தயார் என்றால் அதை வெளிப்படையாக காட்டட்டும் என்று கூறினார்.