4 சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பாளர்களை திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. அவர்கள் வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டனர். அதிமுக, அமமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் இன்னும் வேட்பாளர்களையே அறிவிக்காத கட்சியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இருந்தது.
இந்நிலையில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதன்படி, திருப்பரங்குன்றத்தில் சக்திவேல் என்பவரும், சூலூரில் மயில்சாமி என்பவரும் போட்டியிடுகின்றனர். அரவக்குறிச்சியில் மோகன்ராஜ் மற்றும் ஒட்டப்பிடாரத்தில் காந்தி ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.