தமிழ்நாடு

உயிரிழந்த உதவியாளருக்காக தேம்பி அழுத அமைச்சர் விஜயபாஸ்கர்

உயிரிழந்த உதவியாளருக்காக தேம்பி அழுத அமைச்சர் விஜயபாஸ்கர்

webteam

விபத்தில் உயிரிழந்த தனது உதவியாளரின் உடலைப் பார்த்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்ணீர்விட்டு அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்தவர் பவ் என்ற வெங்கடேஷ். இவர் நேற்று சென்னை புறப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையம் வரை காரில் சென்று வழியனுப்பிவிட்டு, பின்னர் மீண்டும் தனது சொந்த ஊரான பரம்பூர் திரும்பினார். அப்போது பெருமாள்பட்டி என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் புளிய மரத்தில் மோதியது.

இதில் வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரை ஓட்டிவந்த டிரைவர் செல்வமும் விபத்தில் இறந்தார். உயிரிழந்த வெங்கடேசனின் உடல் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பின்னர், சொந்த ஊரான பரம்பூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் வெங்கடேசனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன் வெங்கடேசனின் உடலைப் பார்த்து விஜயபாஸ்கர் தேம்பி அழுத சம்பவம், அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர் வெங்கடேசனின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.