தமிழ்நாடு

சுர்ஜித் மீட்புப் பணியில் ஏன் தாமதம்?- எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி விளக்கம்

webteam

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுர்ஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. குழந்தையை மீட்கும் பணிகள் அன்று மாலை முதலே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரையிலும் குழந்தையை மீட்க முடியவில்லை. பல்வேறு மீட்புக்குழுவினர் முயற்சித்தும் முடியவில்லை. இதற்கிடையே 26 அடியில் சிக்கியிருந்த குழந்தை, 88 அடிக்கு கீழே இறங்கியுள்ளது. சுர்ஜித்திற்காக தமிழகம் முழுவதும் பலரும் பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.


குழந்தையை மீட்க ரிக் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் ரிக் இயந்திரம் தோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டதால், இரண்டாவதாக ராமநாதபுரத்தில் இருந்து அதிநவீன ரிக் இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை தோண்டுவதற்காக பொறுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் களத்தில் சென்று எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி மீட்புப் பணிகளை பார்வையிட்டார். அதன்பின்னர் அவர் புதியதலைமுறைக்கு தொலைப்பேசி வாயிலாக பேட்டியளித்தார். அப்போது, “மீட்புப் பணிகளில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்ற சந்தேகம் எனக்கும் முதலில் இருந்தது. இங்கு நேரில் வந்து மீட்புப் பணிகளை பார்த்தப் பிறகு தான் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்பதை நான் அறிந்தேன். அதிக வேகத்தில் துளையிட்டால், இதனால் ஏற்படும் அதிர்வால் ஆழ் துளை கிணற்றுக்குள் உள்ள சிறுவனுக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே தான் தோண்டும் பணி மெதுவாக செய்யப்பட்டு வருகிறது.

மேலும் குழந்தை உயிருடன் உள்ளதா? என்பது குறித்து நான் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டறிந்தேன். அதற்கு அவர் என்னை அங்கு உள்ள மருத்துவ குழுவினரிடம் அழைத்து சென்றார். அந்த மருத்துவ குழுவினர் தற்போது ஆழ் துளை கிணற்றுக்குள் செலுத்தப்பட்டு வரும் ஆக்சிஜன் அளவு குறித்த விவரங்களை தெரிவித்தனர். அத்துடன் இந்த மாதிரி ஆழ் துளை கிணற்றுக்குள் விழுந்தவர்கள் 13 நாட்கள் வரை உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்தனர். அதேசமயம் தற்போது சிறுவன் சற்று சோர்வு அடைந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவ குழுவினர் என்னிடம் தெரிவித்தனர்” எனக் கூறினார்.