Rajan Chellappa
Rajan Chellappa File Image
தமிழ்நாடு

'அதிமுக கொடியை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு வெட்கமாக இல்லையா..?' - எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா காட்டம்!

PT WEB

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறுகையில், ''கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக ஆட்சியில் நடைபெற்ற தவறுகளை எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் சட்டப்பேரவையில் சுட்டிக் காட்டினார். அதற்கு முதல்வர் சரியான பதில் அளிக்காமல் பழி போடுகிற வேலையைப் பார்க்கிறார்.

அதிமுகவின் அரசியல் மாற்றத்திற்கு காரணமாக மதுரை இருந்துள்ளது அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி மிகப்பெரிய மாநாடு நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல முன்னோடி தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்த மாநாடு வருகிற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருக்கும்.

12 மணி நேர வேலையை அங்கீகரிப்பது என்பது தமிழகத்தில் புதிதானது, தொழிலாளர்களுக்கு ஏற்பதற்கு அல்லாத கோரிக்கையாக உள்ளது. மேலோட்டமாக பார்க்கின்ற போது இது தேவையில்லாத ஒன்றுதான்'' என்றார்.

அதிமுக கொடியை நான் பயன்படுத்துவதற்கு எந்த நீதிமன்றமும் அனுமதி மறுக்கவில்லை என ஓபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, ''கட்சிக் கொடியை பயன்படுத்த இவர் எந்த நீதிமன்றத்தில் கேட்டு அனுமதி பெற்று இருக்கிறார். நாளை மறுதினம் திருச்சியில் ஒரு கூட்டம் நடத்துவதாக உள்ளார். எங்களுக்கு உள்ள வருத்தம் எல்லாம் அதிமுகவில் இருக்கிற ஒரு சில அப்பாவி இளைஞர்கள் இதற்கு பலியாகி விடுவார்கள் என்று பயமாக இருக்கிறது. இந்த இயக்கத்தின் மீது அவர் பற்று வைத்திருந்தால், இந்த கூட்டத்தை ரத்து செய்து விட வேண்டும். அதிமுக பெயரில் அவர் எந்த கூட்டமும் நடத்த முடியாது. தனிக்கட்சி வேண்டுமென்றால் ஆரம்பிக்கலாம். இந்த கூட்டத்தை அவர் ரத்து செய்து விடுவார் என்று தான் நாங்கள் முழுமையாக நம்புகிறோம்'' என்றார்.

OPS AND EPS

கொடநாடு கொலை வழக்கு மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனையால் தான் அதிமுக வெளிநடப்பு செய்தது என்ற கேள்விக்கு பதிலளித்த எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா, ''நேற்று நடந்த கூட்டத்திலேயே எடப்பாடியார் இது குறித்து தெளிவாக சொல்லி இருந்தார் கொடநாடு கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிக்கு ஜாமீன் கொடுத்தது திமுகவை சேர்ந்த வழக்கறிஞள்தான் அவர்கள் மீது எந்தவித விசாரணையாக நடைபெற்றுள்ளதா என்று கேட்டார். இதை நேரடி ஒளிபரப்பு செய்திருந்தால் இந்த கேள்விக்கு இடமில்லை'' என்றார்.

மாநாட்டிற்கு கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் கூறிய எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா, அப்போது உள்ள சூழல் குறித்து எங்கள் பொதுச் செயலாளர் முடிவெடுப்பார். சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பதுண்டு. கூட்டணி கட்சித் தோழர்களை அழைக்க வேண்டிய அவசியம் இருந்தால் நிச்சயம் அழைப்பார்'' என்றார்.

எடப்பாடி பழனிசாமி

அதிமுக கட்சி பெயரையும் கொடியையும் பயன்படுத்தினால் வழக்கு தொடர்வோம் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா, ''நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால் இனி அவர் அதிமுக கொடியை பயன்படுத்த வெட்கமாக இல்லையா என்று கேட்கிறோம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் என்று உறுதி செய்யப்பட்டு விட்டது. தேர்தல் ஆணையமும் அறிவித்துவிட்டது. இனியும் அவர் கொடியை பயன்படுத்துவதும், சின்னத்திற்காக முயற்சிப்பது என்பது ஒரு வெட்கமான செயல் வெட்கக்கேடான செயல். தன்னுடைய பலத்தை நிரூபிக்க அவர் வேறு முயற்சியும் மேற்கொள்ள வேண்டும் அதிமுகவை பயன்படுத்தக் கூடாது'' என்றார்.

சட்டப்பேரவையில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் துதி பாடுகிறார்களே தவிர மக்கள் பேசுவதை பேசவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா, ''முதல்வர் சட்டமன்றத்தில் சொல்லும் போது வேண்டுமென்றே என்னை யாரும் புகழ்ந்தோ பாராட்டியோ பேச வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால் அனைவருமே தவறான கருத்துக்களையும் சேர்த்து புகழ்கின்றனர். அண்ணாவை அறிமுகப்படுத்திய கலைஞர் இன்று ஒருவர் குறிப்பிட்டார் அதற்கு நான் விளக்கம் கேட்டிருந்தேன். பிரேமலதா விஜயகாந்த் சொல்வது ஒரு வகையில் உண்மைதான். மக்கள் நலத் திட்டங்களை இதுவரை 110இன் கீழ் எதுவும் அறிவிக்கவில்லை. தற்போது 110 என்றாலே புதிய சிலை நிறுவுவதோ அல்லது நினைவு மண்டபம் கட்டுவதோ என்று ஆகிவிட்டது'' என்றார்