சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு ஜாமீன் பெற்ற எம்.எல்.ஏ கருணாஸ் வேலூர் சிறையில் இருந்து இன்று காலை விடுதலையானார்.
முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரியை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட கருணாஸ் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சென்னையில் ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கியதாக ஒரு வழக்குப் பதியப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளிலும், எழும்பூர் நீதிமன்றம் நேற்று கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனை தொடர்ந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருணாஸ் இன்று காலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அவதூறாக பேசிய வழக்கில் தினமும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் ஐபிஎல் போட்டியின்போது ரசிகர்களை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் கருணாஸுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாஸ் எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை எதிர்கொள்வேன் என கூறினார்.