தமிழ்நாடு

’’அது பரம ரகசியம்’’ - இபிஎஸ் அணியிலிருந்து ஓபிஎஸ் அணிக்கு மாறிய எம்.எல்.ஏ ஐயப்பன்!

Sinekadhara

எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், ஓ. பன்னீர்செல்வத்தை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்தார்.

அதன்பிறகு ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர் ஓபிஎஸ் - ஐயப்பன் கூட்டணி. அப்போது பேசிய ஓபிஎஸ், ’’எங்களுடைய எண்ணம் செயல் அனைத்துமே ஒன்றுபட்ட அண்ணா திமுகவாகத்தான் இருக்கவேண்டும் என்பதே கட்சி தொண்டர்களின் நிலைப்பாடாக இருக்கவேண்டும். 11 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பொதுக்குழு என்ற பெயரில் அவர்கள் நடத்திய நாடகம், அதிமுக ஒன்று பட்டு இருக்கவேண்டும் என்ற தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது. அதனால்தான் தொண்டர்கள் அனைவரும் எங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். எங்கள் கருத்துக்கு திறந்த மனதோடு முழு ஆதரவை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கழகத்தில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். ஏழை எளிய மக்களின் நலன் காக்கவேண்டும் என்ற நோக்கத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் உருவாக்கப்பட்டதே அதிமுக. அந்த இலக்கை நோக்கிதான் நாங்கள் பயணித்துக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் எங்களுக்கு தொண்டர்களின் ஆதரவும் தமிழக மக்களின் ஆதரவும் முழுமையாக இருக்கிறது. 600 பக்கங்கள்கொண்ட விசாரணைக்குழுவின் அறிக்கை இன்று தமிழக முதல்வரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அவர்கள் என்னென்ன கூறுகளில் விசாரணை நடத்தியுள்ளனர் என்பதை படித்து பார்த்துதான் கருத்து தெரிவிக்கமுடியும். அறிக்கையின் அடிப்படையில்தான் சசிகலாவை கட்சியில் இணைப்பதா என்பது போன்ற அனைத்தும் நடக்கும். தொண்டர்களின் இணைப்பை வலியுறுத்தி மாவட்டந்தோறும் புரட்சி பயணம் தொடர்வோம். ஐயப்பன் இணைந்தது மட்டுமல்லாமல் இத்தோடு நிற்காது. இது தொடரும். அது பரம ரகசியம்’’ என்று கூறியுள்ளார்.

அத்துடன், ”எனக்கு பின்னாலும் 100 ஆண்டு கட்சி இருக்கும் என்று ஜெ சொன்னார். நீதிமன்ற தீர்ப்பில் ஜூன் 23ம் தேதிக்கு முன் என்ன நிலையோ அது அப்படியே நீடிக்கிறது என்று ஓபிஎஸ் சொன்னார். அதனால் வந்துள்ளேன். ஓ.பி.எஸ் பக்கம் மேலும் சட்ட மன்ற உறுப்பினர்கள் வருவாங்க. எங்கள் எண்ணம் செயல் அனைத்துமே ஒன்று நீண்ட அதிமுக தான்” என்று உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கூறியுள்ளார்.