விஜய் ரசிகர்களை தற்குறிகள் என விமர்சிக்க வேண்டாம் என்று திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக இளம் பேச்சாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், விஜய் பின்னால் புரிதலற்று நிற்கும் ரசிகர் கூட்டத்தினரை அரசியல்படுத்த வேண்டியது தங்கள் பொறுப்பு என்றும் பேசியுள்ளார். இவ்வாறு, திமுக எம்எல்ஏ எழிலன் நாகநாதன் பேசியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி ,திமுக இளைஞரணி சார்பில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ’திமுக 75 - அறிவுத் திருவிழா’ என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இதில், பல்வேறு அமர்வுகளில் பல்வேறு பேச்சாளர்கள் கலந்துகொண்டு பேசினார்கள்..
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாம் தேதி மாலை நடைபெற்ற அமர்வில் பேசிய ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ எழிலன் நாகநாதன், “விஜய் கட்சியை சேர்ந்தவர்களை தற்குறிகள் என திமுகவினர் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும், அந்த இளைஞர்கள் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களிடம் நாம் தான் போய் பேச வேண்டும். அவர்களிடம் பேசாமல் விட்டது நம் தவறு.
தற்போது திமுகவில் 200 இளம் பேச்சாளர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள் அவர்கள் இந்த இளைஞர்களிடம் பேச வேண்டும். நாம் அவர்களுடன் உரையாட வேண்டும். விமர்சனம் செய்யக் கூடாது. அவர்களை அரசியல்படுத்த வேண்டியது நமது கடமை” எனப் பேசியுள்ளார்.
இந்நிலையில், விஜய் கட்சியை சார்ந்தவர்களை தற்குறிகள் என அழைக்க வேண்டாம் என திமுக எம்.எல்.ஏ பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.